ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று காரைநகர் இந்துக் கல்லூரியில் அனுமதியைப்பெற்றுக்கொண்டு தமது கல்வியைத் தொடருகின்ற ஆறு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் இரு உறுப்பினர்களான திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களும், திருமதி சிவலிங்கம் கனகாம்பிகை அவர்களும் நிதி உதவியளித்து ஊக்குவிக்க முன்வந்து இவர்களுக்கான முதற்கட்ட உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று தற்போது ஆறாம் ஆண்டில் பயின்று வரும் மூன்று மாணவர்களுக்கும் 2017ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று ஏழாம் ஆண்டில் பயின்றுவருகின்ற இரண்டு மாணவர்களுக்கும் ஆக ஐந்து மாணவர்களுக்கு திரு.மாணிக்கம் கனகசபாபதி தமது மனைவி மனோரஞ்சனாவின் ஞாபகார்த்தமாக உதவியினை வழங்குகின்ற அதேவேளை திருமதி சிவலிங்கம் கனகாம்பிகை தமது கணவரான சிவசம்பு சிவலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆறாம் வகுப்பில் பயின்றுவரும் ஒரு மாணவிக்கான உதவியினை வழங்குகின்றார். திறமைமிக்க இந்த ஆறு மாணவர்களுக்கான இவ்வுதவி அவர்கள் அனைவரும் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் வரைக்கும் தவணை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று வசதிபடைத்த பலரும் நகர்ப்புறப் பாடசாலைகளில் அனுமதியைப்பெற்றுக்கொண்டு சென்று விட்ட நிலையில் இக்கல்லூரியில இணைந்து கல்வியைத் தொடருகின்ற திறமைமிக்க இம்மாணவர்களை உயர்த்திவிடும் நோக்கில் இவ்வுதவியை வழங்க முன்வந்த திரு.கனகசபாபதி அவர்களையும் திருமதி சிவலிங்கம் கனகாம்பிகை அவர்களையும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் பாராட்டி அவர்கள் இருவருக்கும் நன்றியினையும் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தெரிவித்தார். இதேவேளை இவர்கள் இருவரும் இவ்வுதவியை வழங்குவதற்கு முயற்சி எடுத்துக்கொண்ட பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இவர்களுக்கான முதற்கட்ட உதவித் தொகை 05-02-2019 செவ்வாய்க்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற சாதனை மாணவர்களிற்கான பாராட்டு வைபவத்தின்போது திரு. மாணிக்கம் கனகசபாபதி அவர்களினால் ஆறு மாணவர்களிடமும் கையளிக்கப்பட்டது. இம்மாணவர்கள் தமது பெற்றோருடன் சென்று இவ்வுதவித்தொகையினைப் பெற்றுக்கொண்டனர்.
உதவித்தொகை வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று காரை.இந்துவில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான உதவித் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது”