தமது ஆசிரியப் பணியினாலும், சைவத்தமிழ்ப் பணியினாலும் காரைநகர் மக்களின் நெஞ்சங்களில் மட்டுமல்லாது சைவத்தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் நிலைபெற்று விளங்குபவர் சைவமணி, வித்துவான் மு.சபாரத்தினம் அவர்களாவர். சிறந்த சமய விரிவுரையாளரான வித்துவான் சபாரத்தினம் அவர்களின் விரிவுரைகளுக்கு ஈழத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பு இருந்தது. பார்போரைக் கவரும் வண்ணம் கம்பீரமான நெடிதுயர்ந்த தோற்றம் கொண்டு தமிழ்க் கலாசாரத்தையும் தூய்மையினையும் பிரதிபலிக்கும் வகையிலான உடை அணிந்து காணப்படும் வித்துவான் சபாரத்தினம் அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியில் 1976ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரையுள்ள பத்து ஆண்டுகளுக்கு ஆசிரியப் பணியாற்றியவர். சைவசமயம், தமிழ் ஆகிய பாடங்களை மாணவர்கள் மனம் கவரும் வண்ணம் சிறப்புறக் கற்பித்து வந்தவர். பாடசாலையின் சமய, இலக்கிய விழாக்கள் உள்ளிட்ட எத்தகைய விழாவானாலும் அவற்றினை செவ்வனே ஒழுங்கமைத்து முன்னின்று நடாத்திவந்து அனைவரதும் பாராட்டுக்கும் உரியவராக விளங்கினார். கல்லூரியின் மூலகர்த்தா மகான் அருணாசல உபாத்தியாயர், நிறுவுனர் முத்து சயம்பு ஆகியோரால் தொடக்கிவைக்கப்பட்ட இந்துவின் சைவசமய ஒழுக்கப் பாரம்பரியத்தினை பேணி வளர்த்தோர் வரிசையில் வித்துவான் சபாரத்தினம் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
அன்னார் மறைந்த 30வது ஆண்டு நினைவு கூரப்படும் வேளையில் அன்னாரது நினைவாக அன்னாரது பிள்ளைகளினால் காரை.அபிவிருத்திச் சபையின் ஒத்துழைப்புடன் பேரூந்து தரிப்பிடத்தின் நிழல் குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காரை.இந்துவின் கிழக்கு வளாகத்தினதும் வைத்தியசாலையினதும் எல்லைக்கு அண்மையாகவுள்ள தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்நிழல் குடை எதிர்வரும் 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி க.இரத்தினசிங்கம் அவர்களினால் திறந்துவைக்கப்படவுள்ளது. இந்நிழல் குடை அமையப்பெற்றுள்ள தரிப்பிடத்தில் வைத்தியசாலைக்கு வந்துசெல்லும் நோயாளர்களும் பாடசாலை மாணவர்களும் காத்திருந்து பயணிப்பதால் இது பெரிதும் பயன் மிக்கதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளமை குறித்து தனது பாராட்டினைத் தெரிவிக்கின்ற காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை திறப்பு விழா சிறப்புற்று விளங்க வாழ்த்துகின்றது.
No Responses to “வித்துவான் மு.சபாரத்தினம் நினைவாக அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பிடத்தின் நிழல் குடைத் திறப்பு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது.”