காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தன. சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவை அனைத்தும் இசை ரசிகர்களின் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தன என்பது மட்டுமல்லாது பெரு வெற்றி நிகழ்வுகளாக அமையப்பெற்று அவற்றின் ஊடாக காரை.இந்துவின் வளர்ச்சிக்கு உதவுதல் என்கின்ற உயரிய இலக்கினையும் அடையமுடிந்தது. இந்நிகழ்வுகள் மூலமாத் திரட்டப்பட்டிருந்த நிதியே கல்லூரியின் வரலாற்று ரீதியான வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிவைக்க உதவியது.
‘கலைமாமணி’ திருமதி பூசணி கல்யாணராமன், யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை மூத்த விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன், ‘சுப்பர் சிங்கர், சாயி விக்னேஸ், ‘சுப்பர் சிங்கர்’ R.P. ஷ்ரவண் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டிருந்த கர்நாடக இசை நிகழ்ச்சிகளின் வரிசையில் இம்முறை அற்புதமான கர்நாடக இசை நிகழ்வினை வழங்கும்பொருட்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அழைப்பிற்கிணங்க ‘சுப்பர் சிங்கர்’ பி. சாய் சரண் வருகைதரவுள்ளார். உலகப்புகழ்பெற்ற விஜே தொலைக்காட்சியின் ‘சுப்பர் சிங்கர்’ போட்டித் தொடர்3இல் பங்குகொண்ட சாய் சரண் முதலாவது வெற்றியாளராகத்(Title Winner) தடம் பதித்துக்கொண்டவர். இன்று பல திரைப்படங்களுக்கும் பின்னணிப் பாடல்கள் பாடி இசை உலகிலும் திரை உலகிலும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றார். தமிழ்நாட்டின் பல இசை அரங்குகளில் மட்டுமல்லாது ஸ்ரீலங்கா, சிங்கப்பூர, மலேசியா, நோர்வே, வட-அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை வழங்கிப் பாராட்டினைப் பெற்றுக்கொண்டதுடன் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துக்கொண்டவர். எதிர்வரும் மே மாதம்19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் அரங்கில் நடபெறவிருக்கும் சாய் சரணின் கர்நாடக இசைக் கச்சேரியானது கனடாவில் நடைபெறும் இவரது முதலாவது கர்நாடக இசை நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச உதவிகள் கிடைக்கப் பெறாத அவசியத் தேவைகளிற்கான நிதியினைப் பெற்றுக்கொள்வதில் கல்லூரிச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களிற்கு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை முன்னெடுத்துவரும் நிரந்தர வைப்புத் திட்டத்திற்குத் தேவையான நிதியின் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டே சாய் சரணின் இசை நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், அனுசரணையாளர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சிக்கு என்றும்போல தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதன் ஊடாக இந்நிகழ்ச்சி அனைத்துவகையிலும் வெற்றிகரமானதாக அமையப்பெற்று குறிப்பிட்ட உயரிய இலக்கினை அடைவதற்கு உதவிடுமாறு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாகம் உரிமையோடு விண்ணப்பித்துக்கொண்டுள்ளது.
திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலுக்கு மகுடம் சூட்டியது போன்று சாய் சரண் அசத்தலாகப் பாடிய நிகழ்வின் காணொளி ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு திரைப்படங்களில் இடம்பெற்று மக்கள் மனதில் நிலைத்துநிற்கும் இதுபோன்ற பாடல்களையும் சாய் சரண் பாடி மகிழ்விக்கவுள்ளார்.
No Responses to “காரை.இந்துவின் விசேட திட்டத்தின்பொருட்டு நடாத்தப்படுகின்ற இசை நிகழ்வில் பின்னணிப் பாடகர்’சுப்பர் சிங்கர்’ பி. சாய் சரண்”