கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் பாடவிதானம் இணைப்பாடவிதானம் ஆகியவற்றில் 2014ஆம் ஆண்டு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள முக்கியமான செயற்பாடுகளின் பட்டியலையும் அவற்றினை நிறைவுசெய்வதற்கு தேவைப்படும் உத்தேச செலவு மதிப்பீட்டு விபரங்களையும் காரைநகரில் உள்ள பழைய மாணவர்களின் தாய்ச்சங்க நிர்வாகம் கனடா கிளை நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்திருந்ததுடன் அவற்றிற்கு நிதியுதவி செய்யுமாறும் வேண்டிக்கொண்டிருந்தது.
திரு.த.அம்பிகைபாகன் தலைமையில் பதவியிலிருந்த முன்னைய நிர்வாகம் இதனை பரிசீலனை செய்திருந்ததுடன் உடனடியாக உதவக்கூடியதாகவிருந்த ஐந்து இலட்சம் ரூபாவினை அவசியமான சில செயற்பாடுகளிற்கு வழங்குவதென தீர்மானித்திருந்தது.
இதன் ஒரு பகுதியான இரண்டு இலட்சம் ரூபா உடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன் மிகுதி மூன்று இலட்சம் ரூபாவும் கடந்த எப்பிரல் மாதத்தில் தாய்ச் சங்க நிர்வாகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த கனடா கிளையின் தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை பாடசாலையில் ஏற்படக்கூடிய நடைமுறைச் செலவீனங்கள, நிர்வாக உதவியாளர், நூலக உதவியாளர் ஆகியோருக்கான மாதாந்த கொடுப்பனவு, ஆங்கில பாட அபிவிருத்தி, மாணவர் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட பாடவிதான இணைப்பாடவிதான செயற்பாடுகளிற்கு ஐந்து இலட்சம் ரூபாவும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
உதவப்பட்டிருந்த ஐந்து இலட்சம் ரூபாவும் பாடசாலையின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றிருந்த நிகர வருமானம் என்பதுடன் இத்தொகை பாடசாலையின் அவசியப் பணிகளிற்கு உதவும்பொருட்டு ஒதுக்கப்பட்டிருப்பதாக கனடா கிளையின் சென்ற ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “இவ்வாண்டு பாடசாலையின் அவசியப் பணிகளை முன்னெடுக்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஐந்து இலட்சம் ரூபா உதவியது.”