கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து மொத்தமாக 56 மாணவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள க.பொ.த.(சா-த) பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் செயற்பாடுகள் கடந்த ஆண்டுகள் போல இவ்வாண்டும் கல்லூரி நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றினை ஊக்கப்படுத்தும்வகையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை சாத்தியமான உதவிகளை வழங்கிவரும் வரிசையில் ஆங்கில பாட அபிவிருத்திக்கான நிதியுதவியும் உள்ளடங்கியுள்ளது.
தற்கால தொழில்நுட்பம் சார்ந்த கல்விமுறையில் ஆங்கில பாடத்தின் முக்கியத்துவம், கடந்தகால பரீட்சைப் பெறுபேறுகளை நோக்குகையில் ஆங்கில பாடத்தில் மாணவர்கள் பெற்றுவருகின்ற குறைவான சித்தி விகிதாசாரம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு ஆங்கில பாட விருத்திக்கான நிதியினையும் இவ்வாண்டு கனடாக் கிளையினால் பாடசாலையின் அவசியப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் உள்ளடக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
pic
இதனைப் பயன்படுத்தி பரீட்சைக்கு தயார்படுத்தும் 56 மாணவர்களுக்கும் ஆங்கில பாடத்தில் மேலதிக வகுப்புகள், ஆங்கில மொழி கற்பிப்பதில் சிறப்புப் பயிற்சி பெற்றவரும் ஆங்கிலபாட சற்பித்தல் துறையில் நீண்ட கால அநுபவமுள்ளவருமான ஆங்கில ஆசிரியை ஒருவரினால் வார இறுதி நாட்களில் கல்லூரியில் இவ்வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியையும் ஆங்கிலத்துறைக்கான ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி சிவபாக்கியம் நடராசா அவர்களினாலேயே இம்மேலதிக ஆங்கில பாட கற்கை நெறி நடத்தப்பட்டு வருகின்றது.
திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் கல்லூரியின் சிறப்புமிக்க ஆசிரியர் பட்டியலில் இடம்பெற்றவரும் கல்லூரியில் ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகிய பாடங்களை நாற்பது ஆண்டு காலமாகச் சிறப்பாகக் கற்பித்து தனக்கென ஒரு தனியிடம் பிடித்து இன்றும் அபிமானத்துடன் நினைவுகூரும் மாணவர்களைக் கொண்டவருமான அமரர்.R.கந்தையா மாஸ்டர் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில், கல்லூரியின் ஆங்கில ஆசிரியர்களாலும் கடந்த ஆண்டு போல இவ்வாண்டும் வழமைபோல வார நாட்களில் தரம் 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சைகளுக்குத் தயார்படுத்துதல், போட்டிகளுக்குத் தயார்படுத்துதல் என்பனவற்றுக்கான மேலதிக வகுப்புகள் வழமைபோல நடத்தப்பட்டு வருகின்றன.
காரைநகருக்கு வெளியே தொலைதூரத்தில் இருந்து வந்து கல்லூரியில் சேவையாற்றிவரும் இரு ஆங்கில ஆசிரியர்களினாலுமே சேவை உணர்வுடன் இம்மேலதிக வகுப்புகள் வார நாட்களில் பாடசாலையில் நடத்தப்பட்டு வருகின்றன.
No Responses to “க.பொ.த.(சா-த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆங்கில பாடத்தில் மேலதிக வகுப்பு நடத்துவதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை அநுசரணை”