கல்லூரியின் முன்னாள் அதிபர்கள்
1) திரு. A. கனகசபை B.A. (1936 – 1946)
இவர் இக் கல்லூரியில் அ. சீதாராமஐயர் ஓய்வு பெற்றதும் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். இவர் தமது காலத்தில் பட்டதாரிகள் பலரை ஆசிரியராக்கி கல்விநிலையை உயர்த்தியவர். இவர் காலத்தில் இப்பாடசாலை சிரேஷ்டவித்தியாசாலையாகிக் ‘காரைநகர் இந்துக் கல்லூரி’ என்ற பெயரைப் பெற்றது. எஸ். எஸ். ஸி. மெற்றிக் குலேசன் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மாணவர் தொகையும் ஐந்நூற்றைத் தாண்டிக் காணப்பட்டது. சிறந்த நிர்வாகியாக விளங்கிய இவர் ஆசிரியர்களுடன் அன்பாக அரவணைத்து கல்லூரியை வளர்த்தவராவர். விளையாட்டுத்துறை, விஞ்ஞானத்துறை என்பன தடிப்புடன் மிளிர வழிசெய்தவர். இவ் பத்தாண்டுகள் எமது பாடசாலை அதிபராக நிறைவான பணியாற்றிய
2) கலாநிதி ஆ.தியாகராசா M.A.M. Lit. (வெள்ளி விழா அதிபர்) (1946-1970)
கல்லூரியின் பொற்காலம்
கலாநிதி ஆ.தியாகராசா M.A.M. Lit. அவர்கள் கல்லூரியின் அதிபராக பணி புரிந்த காலம் கல்லூரியின் பொற்காலம் என போற்றப்படுகிறது.1941தொடக்கம் தொடர்ச்சியாக இருபத்தெட்டு வருடங்கள் சேவையாற்றிய பெருமைக்குரியவர்.
கல்வித்தர முன்னேற்றம் உயர்தர வகுப்புக்களின வளர்ச்சி பௌதிக வளங்களின் விருத்தி ஆகியன இவரது காலப்பகுதியை பொற்காலம் என இனம் காண வைத்துள்ளது.விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மனையியல் கூடம் நூல் நிலையம் வகுப்பறைகள் என பௌதிக வளங்கள் விஸ்தரிக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதியாகவிருந்த அமரர் நடராசா அவர்களின் நினைவாக அவரது துணைவியார் திருமதி தங்கம்மா அவர்களினால் கட்டப்பட்டு கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நடராசா ஞாபகார்த்த மணடபம தியாகராசா அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாகும். அக்காலகட்டத்தில் மந்திரியாகவிருந்த கௌரவ இராஜபக்ச அவர்கள் இம்மண்டபத்தினை திறந்துவைத்தார்.அத்துடன் அமரர் நடராசா அவர்களின உருவப்படம் அந்நாள் இலங்கை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ஜவர் ஜென்னிங்ஸ் என்பவரால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
விளையாட்டு மைதானம் ஒன்று பாடசாலைக்கு அவசியம் என்பதை உணர்ந்து திருமதி நடராசா அவர்களிடம் நினைவு மண்டபத்துடன் இணைந்து அன்னாரது நிலத்தையும் தர்மசாதனமாக பெற்று விளையாட்டு மைதானத்தை உருவாக்கிய பெருமை அமரர் தியாகராசா அவர்களையே சாரும்.அத்துடன் மலேசியா சென்று அங்கு அரச சேவைகளில் பணிபுரிந்த கல்லூரி பழைய மாணவர்களிடம் நிதி சேகரித்து வந்து சயம்பு ஞாபகார்த்தமாக கீழ் மாடியில் வகுப்பறைகளும் மேல் மாடியில் நூல் நிலையமும்கொண்ட கட்டிடத்தை 1959ஆம் ஆண்டு அமைத்தார்.இக்கட்டிடம் முன்னாள் சபாநாயகர் சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் அதிபராக இருந்த பொழுது கல்லூரியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பௌதிக ஆய்வுகூட (Physics Laboratory) கட்டிடத்தில் பளிங்குக் கல்லின் மேல் (Plaque) R.கந்தையா அவர்களின் உன்னத சேவையைப் பாராட்டி ஆங்கிலத்தில் “In Honour of the Meritorious Service of R. Kandiah (1915-1955)” என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. இக்கட்டிடம் கந்தையா மாஸ்டரிடம் கற்ற மலேசியாவிலுள்ள பழைய மாணவர்களின் நிதி உதவியுடன் கட்டப்பட்டது.
3) திரு. P.S. குமாரசாமி B.A. (1970.04.03 – 1971.06.03)
வட்டாரக்கல்வி அதிகாரியாக பணியாற்றிய இவர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றதும் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னைய அதிபர் பாடசாலைப் பௌதிக வளங்களை ஓரளவு கூட்டியிருந்ததால் இவருடைய ஓராண்டு கால அதிபர் சேவையில் கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் உயர் பெறுபேறுகளைப் பெறுவதற்கு உழைத்தார். பின்னர் யாழ்ப்பாண பிரதம கல்வி அதிகாரியாக பணியாற்றி யாழ் இந்துக் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்று தனது சேவையை அங்கு நிறைவு செய்தார்.
4) திரு. A. நடராசாDip.in.Ed,Gr – 1 Principal (1971.06.04 – 1973.02.27)
இக் கல்லூரியில் 1948 இல் இரந்து ஆசிரியராக ஆங்கிலம், சரித்திரம், குடியியல் போன்ற பாடங்களை துறை போகக் கற்பித்து வந்தார். பாடசாலையில் நீண்ட நல்லாசிரியர்களுள் ஒருவராக திகழ்ந்தார். திரு. P.S. குமாரசாமி அவர்கள் பதவி உயர்வு பெற்றுச் செல்ல அதிபராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டு காலம் வழிநடத்தி வந்துள்ளார். இவருடைய அதிபர் சேவைக் காலத்தில் பாடசாலை சமய விழாக்களை நடத்தியதுடன் கல்வி விளையாட்டுத்துறையிலும் சிறப்பிடம் பெற்றது. இவர் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி அதிபராக இடம் மாற்றம் பெற்றுச் சென்றார். பின்னர் யாழ். தொழில்நுட்பக் கல்லூரி ஆங்கில விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
5) திரு. K. சுப்பிரமணியம்B.Sc Dip.in.Ed (1973.02.28 – 1974.10.31)
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அளவெட்டியில் திருமணம் முடித்தார். இதனால் அளவெட்டிச் சுப்பிரமணியம் மாஸ்ரர் என்றே அழைக்கப்பட்டார். பௌதிகவியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்;த இவரை திரு. A. நடராசா ஓய்வு பெற அதிபராக கல்வித்திணைக்களம் நியமனம் செய்தது. தேசிய உடையில் கம்பீரமாகக் காட்சியளிப்பவர். உயர்தர வகுப்பு மாணவர்களை கண்டிப்புடனும் ஒழுங்குடனும் வழிநடத்தி கணித விஞ்ஞானத்துறையை மிளிரச் செய்தவர்.
6) திரு. K.K. நடராசா B.Sc. Dip in Edu.S.L.E.A.S (1974.11.01 – 1978.01.10)
காரைநகர் பெற்ற நற்பண்பாளர்களுள் ஒருவர். கண்டிப்பும் கனிவும் ஒருங்கே அமையப்பெற்றவர். முதலில் ஆசிரியராக இப்பாடசாலையில் பணிபுரிந்தவர். கணித பாடத்தை திறம்படப் போதித்தவர். சிறந்த நிர்வாகத் திறமைமிக்கவர். இவர் தனது ஆளுமையினாலும் செல்வாக்கினாலும் பாடசாலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். பௌதிகம், இரசாயனம், கணிதம், விலங்கியல் ஆகிய பாடங்களை போதிப்பதற்கு புதிதாக பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறிய பட்டதாரிகளையும், சிறப்புப்பட்டதாரிகளையும் பாடசாலைக்கு நியமனம் செய்வித்து கணித விஞ்ஞான பிரிவில் 120 மாணவர்களுக்கு மேல் கற்கும் நிலையை உருவாக்கியவர். அராலி, வட்டுக்கோட்டை, சித்தன்கேணி, ஊர்காவற்றுறை போன்ற அயல் ஊர்களில் இருந்தும் உயர்தர வகுப்புகளிற்கு மாணவர்கள் வந்து சேர்ந்தனர். இவரது காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த முன்னாள் அதிபர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் அனுசரணையுடன் கல்வித்திணைக்களம் மூலம் நிதி பெறப்பட்டு நிர்வாக மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. பாடசாலை மைதானம் பொன்னாலைப் பகுதியில் இருந்து மண் எடுத்து வந்து நிரப்பி செப்பனிடப்பட்டது. மாதிரி விஞ்ஞான ஆய்வுகூடம், மழைநீர் சேகரிப்புத் தாங்கி ஆகியன அமைக்கப்பட்டன. பாடசாலை சுற்று மதில் விளையாட்டு மைதான சுற்றுமதில் ஆகியன கட்டப்பட்டன. இவ்வாறு கல்லூரி உயர்வதற்கு வழி செய்தவராவார்.
7) திரு. V. தர்மசீலன்B.Sc. . (1978.01.11 – 1980.12.31)
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புகழ்பூத்த புவியியல் ஆசிரியரும் பிரபல சமூக ஊழியருமாகிய திரு. A.T. வேதாபரணம் அவர்களின் மகனாவர். ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இரண்டு ஆண்டுகள் எமது கல்லூரியில் அதிபராகப் பணிபுரிந்தவர். கிறிஸ்தவராக இருந்த போதிலும் இந்துக்கல்லூரியின் பாரம்பரியத்தைப் பேணி மாணவரிடையே ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டினார். அதிபராக மட்டுமன்றி தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியராகவும் திகழ்ந்தார். உயிரியல், விஞ்ஞான பாடங்களை ஆழமாகவும் மாணவர் மனங்கொள்ளத்தக்க வகையிலும் கற்பித்தவர். இவர் அதிபராக இருந்த காலத்தில் 1979ல் பரிசளிப்புவிழா நடத்தப்பட்டு சிறப்புமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
8) கலாநிதி காரை. S. சுந்தரம்பிள்ளை Ph.D, M.A., M.Phil., B.A.(London) Dip.in.Drama, SLEAS-I (1981.01.01 – 1981.11.17)
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிறந்த தழிழ் ஆசிரியர் ஆவார். கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தமிழ், இந்துநாகரிகம், நாடகமும் அரங்கியல் ஆகிய பாடங்களைச் சிறப்பாகக் கற்பித்தவர். அதிபர் பதவியை சிறிது காலமே அணிசெய்தாலும் தனது முத்திரையைப் பதித்தவர். மாணவர் ஒழுக்கமும் கல்லூரி நிர்வாகமும் சிறப்பாக நடைபெறச் செய்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர் நாடறிந்த சிறந்த கவிஞராவர். பல கவிதை நூல்களையும் ஆய்வு நூல்களையும் எழுதிப் பல தடவைகள் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர். பதவியுயர்வு பெற்றுச் சென்று தலவாக்கலை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அதிபராகபப் பணியாற்றியவர். இலங்கையிலும், இந்தியாவிலும் பல்கலைக்கழகங்களில் பகுதி நேர விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். தற்போது இவர் அமரத்துவம் அடைந்து விட்டார்
9) திரு. S. பத்மநாதன்B.Sc. Dip.in. Ed. (1981.11.18 – 1983.01.30 , 1985.08.30 – 1988.01.23)
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலிருந்து மாற்றலாகி வந்த இவர் தாவரவியல் புகட்டம் ஆசிரியராக விளங்கினார். காரை சுந்தரம்பிள்ளை மாற்றலாகிச் செல்ல அதிபர் பதவியை அணிசெய்தார். மாணவர் ஒழுக்கம் பேணுவதில் கண்டிப்பும் அதே நேரத்தில் அன்பும் கொண்டவராய் கல்லூரியின் அபிவிருத்திக்கும் கல்வி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றினார். பாரதி நூற்றாண்டு விழா இவர் காலத்தில் விமர்சையாக மூன்று நாள் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து விழாவிற்கு அறிஞர்கள் வருகை தந்தனர். இவர் கல்லூரி அதிபராக இரு தடவைகள் பணிபுரிந்தவர். இவர் காலத்தில் முறைசாராக்கல்விப் பிரிவின் கீழ் தையல் கைப்பணி வகுப்புக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பாடசாலையில் நடராசா மண்டபத்தில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயத்திற்கு தூபிமுகப்பு அமைப்பித்த அணிசெய் தலைவரானார்.
10) சிவத்திரு. A. K. சர்மா B.Sc. Dip.in. Edu. Gr.1 Principal (1983.01.31 -1984.09)
புகழ்பூத்த கொழும்பு றோயல் கல்லூரி, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி ஆகியவற்றில் இரசாயனவியல் கற்பித்து பின் எமது கல்லூரிக்கு அதிபராக மாற்றலாகி வந்தவர். பொன்னகையையும் விஞ்சும் தாம்பூலம் தரித்த புன்னகை பூத்த வதனமும் வசீகரமான வாக்கும் கொண்டவராய் விளங்கினார். இவர் அன்பினால் மாணவரைக் கவர்ந்தார். கல்லூரி நிர்வாகம் சுமூகமாக நடக்க வழிசெய்தார். முதன்முதல் தாய்மொழியில் இரசாயன நூல்களை எழுதி மாணவருக்கு அளப்பரிய சேவை ஆற்றியவர். இவர் கடமைக்கு வரும் வழியில் 1985ல் அமரத்துவம் எய்தினார்.
11) திரு. M. திருநீலண்டசிவம் B.A, Dip.in.Ed.Gr.1 Principal (1987.10.09 – 1991.10.19)
காரைநகர் தந்த அறிஞர்களுள் ஒருவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமை உடையவர். துணிவும், பேச்சுவன்மையும் கொண்ட ஆளுமை நிறைந்தவர். கொத்தணி அதிபராக இருந்து காரைநகரில் இரந்த 14 பாடசாலைகளுக்கும் தலைமை வகித்து சிறப்புடன் நடத்தியவர். கல்லூரியின் நூற்றாண்டு விழா இவரது காலத்தில் கொண்டாடப்பட்டது. பதவி உயர்வு பெற்று உதவிக்கல்விப்பணிப்பாளராக பண்டத்தரிப்பு கோட்டத்தில் கடமையாற்றி ஒய்வுபெற்றார். தனது இறுதிக் காலத்தில் கொழும்பில் வசித்து வந்த இவர் 1996ல் அமரத்துவம் அடைந்தார்.
12) திருS. R. S. தேவதாசன் B.A, Dip.in.Ed.Gr.1 Principal (1991.10.20 – 1993.10.11)
கல்லூரியில ஆசிரியராக இந்துநாகரிகம், சமூகக்கல்வி ஆகிய பாடங்களைப் போதித்தவர். பதவி உயர்வு பெற்று சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை அதிபராகக் கடமையாற்றியவர். இடப்பெயர்வு காலத்தில் எமது கல்லூரி அதிபராகக் கடமை ஏற்று கொத்தணி அதிபராகவும் பணியாற்றியவர். பதவி உயர்வு பெற்று உதவிக்கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
13) திருமதி. தேவநாயகி பாலசிங்கம் B.Sc. Dip.in.Ed S.L.E.A.S (1993.10.12 – 1998.05.05)
கல்லூரியின் பழைய மாணவி நீண்டகாலமாக விலங்கியல் பாடத்தை சிறப்புடன் போதித்தவர். கல்லூரிச் செயற்பாடுகள் யாவற்றிலும் துணிவுடன் முன்னின்று உழைத்தவர். 1991ல் கல்லூரியின் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார். 1991 ஏப்பிரலில் இடப்பெயர்வால் நிலைகுலைவு ஏற்பட்ட போது கல்லூரியின் தனித்துவத்தைப் பேணி வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டவர். 1993ல் அதிபராகப் பதவியேற்று கல்லூரியின் சிறப்பு குறைவுறா வண்ணம் நடத்திச் சென்றவர். மீளக்குடியேறிய போது கல்லூரியை துணிவுடன் சொந்த இடத்தில் இயங்க வைத்து மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்தவர். யாழ்ப்பாணத்தில் நெருக்கடியான காலகட்டத்தில் தொண்டமானாறு வெளிக்கள நிலையச் செயலாளராக இரந்து க.பொ.த உயர்தர மாணவர்களிற்கான பரீட்சையை சிறப்புடன் நடத்துவதற்கு அரும்பணியாற்றியவர். தற்போது பதவி பெற்று பரீட்சை திணைக்கள அதிகாரியாகக் கடமையாற்றுகிறார்.
14) பண்டிதர். மு. சு. வேலாயுதபிள்ளை S.L.P.S.Gr.1 (1998.05.06 – 2005.08.18)
கல்லூரியின் பழைய மாணவராகிய இவர் இக்கல்லூரியில் 1978 இல் இருந்து விசேட வர்த்தக பயிற்சி ஆசிரியராகவும் தமிழ் பண்டிதராகவும் பணியாற்றியவர். உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கணக்கியல், வர்த்தகம், தமிழ் ஆகிய பாடங்களைப் போதித்து உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்து நல்லாசிரியர் என்னும் பெயர் பெற்றவராவர். 1989 இல் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவை பரீட்சையில் சித்தி பெற்றமையால் இக் கல்லூரியின் உப அதிபராக நியமிக்கப்பட்டார். அதிபராயிருந்த திருமதி. பாலசிங்கம் அவர்கள் இடம் மாற்றம் பெற்ற பின்னர் 1998.05.06 இல் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்று 2005.08.18 வரை இக்கல்லூரிக்குச் செயல்கரிய செயல்கள் பலவற்றை செய்து முடித்தவராவர்.
15) திரு. K. குமாரவேலு(SLTS Gr 1) (2005.08.19 – 2008.08.18)
விசேட ஆங்கிலப் பயிற்சி ஆசிரியரான .வர் இடப்பெயர்வு காலத்தில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலத்தில் (1987 – 1992) 5 ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். 1996ல் இக்கல்லூரி ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2002ல் இக்கல்லூரி உபஅதிபராகக் கடமையாற்றியுள்ளார். பண்டிதர் ஓய்வு பெற ஆதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். கனிஷ்ட பிரிவாக விளங்கிய சுப்பிரமணிய வித்தியாசாலையில் கட்டிடத் திருத்தங்கள் செய்ததோடு கிணறு அமைத்து குழாய் மூலம் நீர் விநியோகம் செய்தற்கான ஒழுங்குகளும் மேற்கொண்டுள்ளார். இவர் காலத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் உயர்நிலையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
16) திரு. A. குமரேசமூர்த்திM.A.S.L.P.S.Gr 2(2008.10.03 – 2010.05.03)
காரைநகர் வியாவில் சைவ வித்தியாலத்தில் கடமையாற்றிய இவர் 2008ல் இக் கல்லூரி அதிபராகக் கடமையேற்றுள்ளார். இவர் தொடர்ந்து கல்லூரி வளர்ச்சி பாதையில் முற்பட்டுள்ளார்.
17) திரு.பொன்.சிவானந்தராஜா Sp.Trd. Sc., B.Ed(Hons.), Dip.in School Mgt., S.L.P.S – I
கோப்பாய் மகா வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றிய இவர் 2010 ம் ஆண்டு இக் கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றார். இவர் காலத்தில் நடராசா மண்டபம் பூரண திருத்தம் செய்யப்பட்டதோடு மண்டபத்திற்குரிய கதிரைகளும் இடப்பட்டன. இலத்திரனியல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
இவரது காலத்திலேயே பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அமைக்கப்பட்டது.
18) திருமதி.வாசுகி தவபாலன் Spe.Trd(Science) B.Sc.(Hons) Dip.;In Ed.(Distinction with Gold Medal Awarded) M.Ed.,M.Phil. ,SLPS 2 – 11
இக்கல்லூரியின் அதிபராக இரு ஆண்டுகளாக கடமையாற்றிய திரு.பொன்.சிவானந்தராசா அவர்கள் வேலணைக் கோட்டக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் 18-01-2013 தொடக்கம் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கல்லூரியின் பழைய மாணவியும் பாலாவோடை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஆவார். சிறந்த நிர்வாகத் திறனும் ஆளுமையும் மிக்க இவரது பதவிக்காலத்தில் கல்வியில் மட்டுமல்லாது இணைப்பாட விதானங்களிலும் முகாமைத்துவத்திலும் பெரு வளர்ச்சி ஏற்பட அர்ப்பணிப்புடன் உழைத்தவர். மகிந்தோதய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டு திறந்து வைத்தமை, கல்லூரியின் பௌதிகவளச் சூழல் அழகாக்கப்பட்டமை, மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம் தொடக்கி வைக்கப்பட்டமை, கல்லூரியின் 125வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டமை ஆகியன இவரது பதவிக் காலத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மூன்று ஆண்டுகள் இக்கல்லூரியில் சிறப்பான சேவையை வழங்கிய திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் ஜனவரி 2016 முதல் ஒரு ஆண்டிற்கு பட்டப்பின்படிப்பு கற்கைநெறி ஒன்றினை மேற்கொள்ளும்பொருட்டு கற்றல் விடுமுறையில் சென்று திரும்பிய பின்னர் ஜனவரி 2017ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
திருமதி கலாநிதி சிவநேசன் B.Com.(Hons.), PGDE., SLTS 1
ஜனவரி 2016ஆம் ஆண்டு முதல் கற்றல் விடுமுறையில் சென்ற திருமதி வாசுகி தவபாலன் மீண்டும் ஜனவரி 2017ஆம் ஆண்டு மீள வந்து பதிவியேற்கும் வரையுள்ள ஓராண்டு காலத்திற்கு கல்லூரியின் மூத்த ஆசிரியையான திருமதி கலாநிதி சிவநேசன் அவர்கள் அதிபர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். களபூமி, காரைநகரைச் சேர்ந்த இவரும் கல்லூரியின் பழைய மாணவி ஆவார். உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு வணிகக் கல்வியையும் 2012ஆம் ஆண்டு முதல் அர்ப்பணிப்புடன் கற்பித்து வந்தவர்.
திருமதி சிவந்தினி வாகீசன் B.Sc.(Hons.), Dip.in.Edu., M.Edu., SLPS. (2017-2019)
திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் வைத்தீஸ்வராக் கல்லூரியின் அதிபராக இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து கல்லூரியின் உயிரியல் ஆசிரியையாக ஆம் அண்டு முதல் பணியாற்றி வந்த திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டு கல்லூரியின் வளர்ச்சியை சிறந்த முறையில் நகர்த்திச் சென்றார். இவர் வலந்தலை, காரைநகரைச் சேர்ந்தவரும் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார். பாடவிதானம், இணைப்பாடவிதானம் ஆகிய செயற்பாடுகளில் வலயம், மாகாணம், தேசியம் ஆகிய மட்டங்களில் சிறந்த சாதனைப் பெறுபேறுகள் இவரது பதவிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டது. கல்லூரியின் அடிப்படைத் தேவைகளிற்கு நிரந்தரமாக உதவும் திட்டம் இவருடைய ஒத்தழைப்புடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படிருந்தது. உயர்தர வகுப்பிற்கு உயிரியல் பாடத்தினையும் போதித்தது வந்த இவர் இப்பாடத்தில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு காரணமாகவிருந்தார். 2020ஆம் ஆண்டு முதல் உடுவில் இராமநாதன் கல்லூரியின் பிரதி அதிபராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.